தமிழ் மொழிக்கான கலைத்திட்டம்.

அறிமுகம் (Preamble)
உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றாகிய தமிழ், தென்னாசியாவில் வழக்கிலுள்ள பல திராவிடமொழிகளின் தாயாகக் கருதப்படுகிறது. தமிழ்ப் பண்பாடு மிகப் பழமையானது. அது வடவேங்கடம் தொட்டு தென்குமரிவரை பரந்து விரிந்த நிலப்பரப்பில் பல ஆண்டுகளாக வளர்ச்சியுற்று வந்திருக்கின்றது. தமிழமொழியிலே உள்ள இலக்கண நூல்களும், இலக்கியங்களும் தனித்துவம் பொருந்தியவை. அவை சமஸ்கிருதம் முதலான பிற மொழிகளின் செல்வாக்குக்கும் தாக்கத்திற்கும் உட்படாதவை. அதனாலேதான் தமிழ்மொழி சந்தேகமின்றி செம்மொழியாக கணிக்கப்பட்டும் உயர்நிலையில் மதிக்கப்பட்டும் வருகின்றது.

நீண்ட இலக்கியப் பாரம்பரியமும் பிறமொழிகளின் செல்வாக்கிற்குட்படாமல் தனித்து நிற்கும் இலக்கணமும் தமிழ் செம்மொழியாக உயர்ந்து நிற்பதற்குத் துணையாக இருக்கின்றன. தமிழரின் இலக்கிய இலக்கணப் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு அடுத்த தலைமுறையினருக்கு வழங்கப்பட வேண்டும். தமிழ்மொழியின் அமைப்பும் அது உலகமொழிகள் பலவற்றுடனும் கொண்டுள்ள பிணைப்பும் ஆழமான மொழியியல் பின்புலத்தில் ஆய்வுசெய்யப்பட வேண்டும். அவ்வாறே தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்தும் சமூக பண்பாட்டம்சங்கள் தெளிவாக ஆராயப்பட்டு வரலாற்றுத் தொடர்ச்சியும் பண்பாட்டுச் சிறப்பும் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட வேண்டும். தமிழ் என்பது ஒரு மொழி என்பதற்கு அப்பால் அது இலக்கியம், இலக்கணம், சமயம், சமூகவியல், ஒழுக்கவியல், மெய்யியல், சூழலியல், அறிவியல் முதலான பண்பாட்டுக் கூறுகள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டிருப்பதால் தமிழ் தொடர்பான கற்கை தமிழியல் என்ற பரிமாணத்தைப் பெற்றிருப்பதைப் பட்டதாரிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இக் கற்கைநெறி அமையும். சிறப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் இக் கற்கைநெறி தமிழியல் சார்ந்ததாகவே முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974 ஆம் ஆண்டு பல்கலைக்கழக வளாகமாக ஆரம்பிக்கப்பட்டது. மனிதப் பண்பியல் பீடத்தில் தமிழ், இந்துநாகரிகம் ஆகிய துறைகள் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளாகக் கருதப்பட்டன. தமிழ்த்துறையின் முதலாவது பேராசிரியராகவும் அதன் தலைவராகவும் பேராசிரியர். க. கைலாசபதி நியமிக்கப்பட்டார். வளாகத்தின் தலைவராகவும் இவரே செயற்பட்டுவந்தார். 1976 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண வளாகம் பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தப்பட்டபோது மற்றொரு தமிழ்ப் பேராசிரியரான கலாநிதி. சு. வித்தியானந்தன் அதன் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர். க. கைலாசபதி கலைப்பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார். இதேவேளையில் இணைப் பேராசிரியராக இருந்த கலாநிதி. கா. சிவத்தம்பி தமிழ்த்துறையின் தலைவராகப் பதவியேற்றிருந்தார். சர்வதேச அளவில் அறியப்பட்டவர்களான மேற்படி பேராசிரியர்களின் வழித்தடத்தில் தமிழ்த்துறை செயற்பட்டு வந்ததால் இது முக்கியத்துவம் வாய்ந்த துறையாக விளங்கிவந்தது. பின்னாளில் பேராசிரியர். ஆ. வேலுப்பிள்ளை, பேராசிரியர். அ. சண்முகதாஸ் முதலிய மூத்த பேராசிரியர்களும் இத்துறையில் பணியாற்றி இதனை வளப்படுத்தியுள்ளனர்.
1974 இல் பேராசிரியர். க. கைலாசபதியுடன் ஆரம்பித்த இத்துறையில் தமிழ் நாவல் நூற்றாண்டுவிழா, நாட்டார் வழக்கியல் கருத்தரங்கு, ஆக்க இலக்கியமும் அறிவியலும் தொடர்பான கருத்தரங்கு, ஈழத்து இலக்கிய வரலாற்றுக் கருத்தரங்கு என்றவாறு தொடங்கிய ஆய்வு முயற்சிகள் தற்போது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாடுகளாக விரிந்து நிற்பதனைக் காணக்கூடியதாக உள்ளது.


பட்டதாரித் தகுதிக்கோவை (Graduate Profile)

இக் கற்கைநெறியின் மூலமாக மாணவர்கள் தமிழிலுள்ள மரபுசார்ந்த இலக்கணத்தினையும், நவீன தமிழ் இலக்கணத்தினையும் அறிந்திருப்பர். இதன் மூலம் தமிழிலுள்ள சொற்களையும், அவற்றின் பயன்பாட்டினையும் அறிந்துகொள்வதுடன் அவை காலந்தோறும் எவ்வாறு வளர்ச்சிபெற்றுப் பொருள் வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன என்பதையும் அறிந்துகொள்வர்.
மேலும் பட்டதாரிகள் பழந்தமிழ் இலக்கியங்களையும், நவீன இலக்கியங்களையும் அவற்றின் தோற்றகாலப் பின்னணியுடன் விளங்கிக்கொள்வதோடு, இலக்கியங்கள் காட்டும் சமூக வரலாற்றையும் அறிந்துகொள்வர்.
தமிழ்ப் பட்டதாரிகள் இலக்கியம், மொழி என்பவற்றில் பரிட்சயம் உடையவர்களாக இருப்பதுடன், தமிழ்ப்பண்பாடு தொடர்பான அறிவையும் பெற்றிருப்பர். இதனால் இவர்கள் ஆசிரியப்பணியிலும், ஊடகத்துறைகளிலும் பணியாற்றத்தக்கவர்களாக இருப்பர்.

 

புலமைத்துவ மேம்பாடு (Academic Excellent)

மரபிலக்கணத்திலும், நவீன தமிழிலக்கணத்திலும் தெளிவான அறிவைப் பெறுவர்.
தமிழ் இலக்கண வரலாற்றைத் தெளிவாக அறிந்துகொள்வர்.
தமிழ் இலக்கியங்களின் கருப்பொருள், வடிவம், உத்திகள் முதலியவற்றைத் தெரிந்துகொள்வர்.
தமிழ்மொழியின் வளர்ச்சியைத் தெரிந்துகொள்வர்.
பழந்தமிழ் இலக்கியங்களிலும், நவீன தமிழ் இலக்கியங்களிலும் தெளிவான அறிவைப் பெறுவர்.
தமிழ் இலக்கியங்களினூடாகத் தமிழரின் அறிவியல், சமூகபண்பாடு முதலானவற்றை அடையாளம் காண்பர்.

 

தொழிலுக்கான தயார் நிலையும் வேலைவாய்ப்பும். (Employability and Professional Reediness)

தமிழைப் பொதுக்கலையில் ஒருபாடமாகவோ அல்லது சிறப்புப் பாடநெறியாகவோ கற்கும் மாணவர்கள் தமிழில் சிறந்த தேர்ச்சி பெறுகின்றனர். மொழி ஊடகத்தில் இவர்கள் பெறுகின்ற ஆற்றலால் சிறந்த கட்டுரையாளர்களாக, விமர்சனகாரராக இவர்கள் பத்திரிகைத்துறையில் பணியாற்றக்கூடிய ஆற்றலைப் பெறுகின்றனர். அவ்வாறே இவர்களின் பேச்சாற்றல் காணொலி ஊடகங்களில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கவும், விவாத அரங்குகளை நடாத்தவும் கூடிய மொழி ஆளுமையை இவர்களுக்கு வழங்குகின்றது.
மேலும் தமிழ், பாடசாலை மட்டத்தில் கட்டாயபாடமாக இருப்பதால் தமிழாசிரியர்களாகப் பணிபுரிவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு நிறையவே உள்ளது. அவ்வாறே பண்பாடு, கலைசார்ந்த துறைகளிலும் இவர்களால் சிறந்த பணியாற்றமுடியும்.
தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியாற்றும்போது மனிதஅறம், ஒழுக்கம் முதலான மனிதவிழுமியங்களை மாணவர்களுக்குப் போதிக்கக்கூடிய ஆற்றலை உடையவர்களாகவும் இருப்பர்.

ஆக்க முயற்சியும் திறனாய்ந்து கூறுதலுக்குமான தகவமைப்பு.(Creativity Critically and adaptability)

இக் கற்கைநெறியினைப் பூர்த்திசெய்த மாணவர்கள் ஆக்க இலக்கியத்துறையில் சிறுகதை, நாவல், கவிதை முதலானவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பர்.

படைப்பிலக்கியங்களைத் திறனாய்ந்து கூறும் ஆற்றலைப் பெற்றிருப்பர்.

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விடயத்தை விளக்கிக்கொண்டு பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுகொள்ளும் திறனைப் பெற்றிருப்பர்.

வேலைத்தளங்களில் தமது ஆற்றலைப் பயன்படுத்தக்கூடியவர்களாக இருப்பர்.

 

ஒழுக்க விழுமியங்கள் தொடர்பில் விழிப்புணர்வாகவும் சுயசிந்தனையுடனும் இருத்தல் (Independent Thinking Self Awainess and Ethical Understanding)

சுயமான சிந்தனை, தேடல் முயற்சி, விழிப்புணர்வு, ஆய்வறிவும் நேர்மையும் கொண்டவர்களாக இருத்தல்.

பல்லின – பண்பாட்டுச் சூழலில் மற்றவர்களைப் புரிந்துகொண்டு, அவர்களின் கருத்துக்களுக்கும் பண்பாட்டு அடையாளங்களுக்கும் மதிப்பளித்து வாழக்கூடிய ஆற்றல்.

தொடர்பாடல் (Communication)
மொழியாற்றலைப் பெற்றுக்கொள்வதால் சமூகத்தொடர்பாடல், ஊடகங்களினூடான தொடர்பாடல் முதலியவற்றில் ஆற்றலைப் பெற்றிருப்பர்.

 

Programme Educational Objectives (PEOs)

தமிழ்மொழியினதும் இலக்கியத்தினதும் தொன்மையினையும் வரலாற்றினையும் அறிய உதவும்.

தமிழர் பண்பாட்டு விழுமியங்களையும் சமூக வரலாற்றினையும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியில் திறனாய்வு செய்ய உதவும்.

காலந்தோறும் மொழியில் ஏற்பட்டு வந்த மாற்றங்களையும் அதன் வளர்ச்சியினையும் திறனாய்வுபூர்வமாக கண்டுகொள்ள உதவும்.

தமிழ்மொழியையும் இலக்கியத்தையும் பிறமொழிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய வழிவகுக்கும்.

கோட்பாட்டு ரீதியாக தமிழ் இலக்கியங்களை மேலைத்தேய இலக்கியங்களுடன் ஒப்பீடு செய்ய உதவும்.

 

Programme Learning Outcomes (PLOs)
PLO 1: தமிழ் இலக்கணத்திலுள்ள சிக்கல்களைத் திறனாய்வு செய்வர்.
PLO 2: சுயமாகக் கட்டுரைகளை வடிவமைப்பர்.
PLO 3: இலக்கியம் என்றால் என்ன என்பதை வரையறை செய்வர்.
PLO 4: இலக்கிய வடிவங்கள் உருவாகிய சூழலை விபரிப்பர்.
PLO 5: தமிழ் இலக்கியங்களை முழுமையாக விமர்சனம் செய்வர்.
PLO 6: இலக்கிய உத்திகளை இனங்காண்பர்.
PLO 7: இலக்கியத்தை விமர்சிக்கும் பயிற்சியினைப் பெறுவர்.
PLO 8: இலக்கியத்தின்வழி தமிழ்மக்களின் சமூக பொருளாதார வரலாற்றை வியாக்கியானம் செய்வர்.
PLO 9: தமிழ் இலக்கியங்கள் காட்டும் உயர்ந்த பண்பாட்டு விழுமியங்களைக் கண்டுபிடிப்பர்.
PLO 10: கணினி வழியாகவும், இணையவழியாகவும் கற்கும், கற்பிக்கும் திறனைப் பெறுவர்.
PLO 11: இணையவழியூடாக ஆய்வு செய்யும் திறனைப் பெறுவர்.