யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்
                                                                                         தமிழ்த்துறை

இலங்கையின் பிரதமராக இருந்த மாண்புமிகு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவால் 1974 அக்டோபர் ஆறாம் நாள் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகமாக யாழ்ப்பாண வளாகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவ்வேளையில் யாழ்ப்பாண வளாகத்தின் மனிதப் பண்பியற் பீடத்தின் பிரதான மையமாக தமிழ், இந்துநாகரிகம் ஆகிய கற்கைநெறிகள் அமைந்திருந்தன. யாழ்ப்பாண வளாகத்தின் முதலாவது தலைவராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் கலாநிதி. க. கைலாசபதி நியமிக்கப்பட்டார். பேராசிரியர். க. கைலாசபதியே தமிழ்த்துறையின் முதலாவது தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். வித்தியாலங்கார வளாகத்தில் தமிழ்த்துறையின் தலைவராக இருந்த அனுபவத்தின் அடிப்படையில் பேராசிரியர். க. கைலாசபதி யாழ்ப்பாண வளாகத்தின் தமிழ்த்துறைக்கான பாடவிதானங்களை உருவாக்கியிருந்தார்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் பணியாற்றிய திருமதி. யோகேஸ்வரி கணேசலிங்கம் 1975 ஆகஸ்டில் யாழ்ப்பாண வளாகத்தின் தமிழ்த்துறைக்கு முதலாவது உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து கலாநிதி. அ. சண்முகதாஸ் பேராதனை வளாகத்திலிருந்து யாழ்ப்பாண வளாகத்திற்கு இடமாற்றம் பெற்று சிரேஷ்ட விரிவுரையாளராகவும், துறைப்பெறுப்பு விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

1976 இல் யாழ்ப்பாண வளாகம் பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தப்பட்டது. இதன் முதலாவது துணைவேந்தராக தமிழ்ப்பேராசிரியர். கலாநிதி. சு. வித்தியானந்தன் நியமிக்கப்பட்டார். பேராசிரியர். க. கைலாசபதி கலைப்பீடாதிபதியாகச் செயற்பட, இணைப்பேராசிரியராக நியமிக்கப்பட்ட கலாநிதி. கா. சிவத்தம்பி தமிழ்த்துறையின் தலைவராகப் பெறுப்பேற்றுக் கொண்டார். பின்னாளில் திருமதி. சித்திரலேகா மௌனகுரு, திரு. எம். ஏ. நுஃமான், திருமதி. கலையரசி சின்னையா, திரு. நா. சுப்பிரமணியன், திரு. எஸ் சிவலிங்கராஜா, கலாநிதி. இ. பாலசுந்தரம், திரு. ம. இரகுநாதன், திரு. பொ. செங்கதிர்ச்செல்வன், திரு. கி. விசாகரூபன், செல்வி. செ. சிவசுப்பிரமணியம், திரு. க. அருந்தாகரன், திரு. ஈ. குமரன், திருமதி. செல்வ அம்பிகை நந்தகுமரன், திரு. த. அஜந்தகுமார், திரு. செ. செரஞ்சன் என விரிவுரையாளர்களின் வரிசை நீண்டு சென்றது.

1982 டிசெம்பர் ஆறாம் நாள் பேராசிரியர். க. கைலாசபதி எதிர்பாராதவிதமாக மரணத்தைத் தழுவிக்கொண்டார். இதனால் வறிதாகிப்போன தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கு பேராதனைப் பல்கலைக்கழத்தில் இணைப்பேராசிரியராக இருந்த கலாநிதி. ஆ. வேலுப்பிள்ளை நியமிக்கப்பட்டார். பேராசிரியர். ஆ. வேலுப்பிள்ளை 1984 முதல் தமிழ்த்துறையின் தலைமைப் பெறுப்பை ஏற்றுக்கொண்டார். பேராசிரியர். க. கைலாசபதியின் திடீர் மறைவால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையிலும், மாணவர்களின் மனக்குழப்பத்தை அமைதிப்படுத்தும் வகையிலும் துணைவேந்தராகப் பணியாற்றிய மூத்த தமிழ்ப்பேராசிரியர் கலாநிதி. சு. வித்தியானந்தன் தனது பணிச்சுமைகளின் மத்தியிலும் தமிழ்த்துறை மாணவர்களுக்கு விரிவுரையாற்றும் பொறுப்பைத் தானாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டார்.

பேராசிரியர். க. கைலாசபதியை முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் கொண்டு ஆரம்பித்த தமிழ்த்துறையில் பின்னாட்களில் பேராசிரியர். கா. சிவத்தம்பி, பேராசிரியர். அ. சண்முகதாஸ், பேராசிரியர். ஆ. வேலுப்பிள்ளை, இணைப்பேராசிரியர். இ. பாலசுந்தரம், இணைப்பேராசிரியர். நா. சுப்பிரமணியன், பேராசிரியர். எஸ். சிவலிங்கராஜா, பேராசிரியர். கி. விசாகரூபன், பேராசிரியர். ம. இரகுநாதன் ஆகியோர் துறைத்தலைவர்களாகப் பணிபுரிந்துள்ளனர். பேராசிரியர். க. கைலாசபதியின் மரணத்திற்கும் பேராசிரியர். ஆ. வேலுப்பிள்ளையின் நியமனத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் கலாநிதி. எஸ். சுசீந்திரராஜா, திருமதி. கலையரசி சின்னையா ஆகியோரும் மிகவும் குறுகிய காலப்பகுதியில் தமிழ்த்துறைத் தலைவர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.

பேராசிரியர். க. கைலாசபதி தமிழ்த்துறைத் தலைவராக இருந்த காலத்தில் 1975 இல் ஆக்க இலக்கியமும் அறிவியலும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கு நிகழ்த்தப்பட்டு நிகழ்வில் படிக்கப்பட்ட கட்டுரைகள் நூலாக வெளியிடப்பட்டன. இந்நூலை பேராசிரியர். அ. சண்முகதாஸ் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார்.

1976 இல் பேராசிரியர். க. கணபதிப்பிள்ளையின் நினைவாக நடாத்தப்பட்ட ‘இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்காற்றியல்’ கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளைப் பேராசிரியர். கா. சிவத்தம்பி தொகுத்து நூலாக வெளியிட்டிருந்தார். 1979 இல் தமிழ் நாவல் நூற்றாண்டினையொட்டி பேராசிரியர். க. கைலாசபதியின் தலைமையில் நாவல் நூற்றாண்டுக் கருத்தரங்கு நிகழ்த்தப்பட்டது. தமிழகத்திலிருந்து பிரபல நாவலாசிரியர் அசோகமித்திரன் இக் கருத்தரங்கில் கலந்து சிறப்பித்திருந்தார்.

1982 இல் பேராசிரியர். கா. சிவத்தம்பி தமிழ்த்துறையின் தலைவராக இருந்த காலத்தில் மகாகவி பாரதியின் நூற்றாண்டையொட்டி துணைவேந்தர் பேராசிரியர். சு. வித்தியானந்தனின் தலைமையில் பல்வேறு துறையினரையும் இணைத்து பாரதி தொடர்பான கருத்தரங்கு நடாத்தப்பட்டது. இக்கருத்தரங்கே பேராசிரியர். க. கைலாசபதி பல்கலைக்கழகத்தில் இறுதியாகக் கலந்துகொண்ட கருத்தரங்கு என்பதுடன், இதில் அவர் நிகழ்த்திய உரை பாரதி ஆய்வில் புதுமையானதாகவும் காத்திரமானதாகவும் இருந்தது.

பேராசிரியர். ஆ. வேலுப்பிள்னை தமிழ்த்துறையின் தலைவராகப் பெறுப்பேற்றுக் கொண்ட பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் சுவீடனிலுள்ள உப்சலா பல்கலைக்கழகமும் இணைந்து பணியாற்றும் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்திற்கேற்ப உப்சலா பல்கலைக்கழகத்தில் விருந்துப் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினை பேராசிரியர். ஆ. வேலுப்பிள்ளை பெற்றுக்கொண்டார். இதன்மூலம் பின்னாளில் உப்சலா பல்கலைக்கழகம் பேராசிரியருக்கு கௌரவ கலாநிதிப்பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகமொன்று இலங்கைப் புலமையாளர் ஒருவரைக் கௌரவித்துப் பட்டமளித்தது இதுவே முதற்தடைவ என்பதால் தமிழ்த்துறைக்கு பேராசிரியர் பெருமை சேர்த்துள்ளார் என்பது வரலாற்றில் பதிவுசெய்யப்பட வேண்டியதாகும்.

பேராசிரியர். ஆ. வேலுப்பிள்ளை உப்சலா பல்கலைக்கழகத்திற்குச் சென்றதைத் தொடர்ந்துவந்த நீண்ட காலப்பகுதியிலும் அவரது ஓய்வுக்குப் பின்னரும் பேராசிரியர். அ. சண்முகதாஸ், கலாநிதி. இ. பாலசுந்தரம், கலாநிதி. நா. சுப்பிரமணியன், பேராசிரியர். எஸ். சிவலிங்கராஜா, பேராசிரியர். கி. விசாகரூபன் ஆகியோர் தமிழ்த்துறையின் தலைவர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

மேற்படி காலத்தில் காலஞ்சென்ற பேராசிரியர். க. கைலாசபதியின் நினைவாக ஈழத்துத் தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்தரங்கும், சங்க இலக்கியம் தொடர்பான கருத்தரங்கும் நடாத்தப்பட்டது. அத்துடன் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களை அழைத்து உரையாற்றுவிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

2017 இல் பேராசிரியர். ம. இரகுநாதன் தமிழ்த்துறைத் தலைவராகப் பெறுப்பேற்றார். இவரது காலத்தில் அனைத்துலக மட்டத்திலான தமிழியல் மாநாடுகள் நடாத்தப்பட்டன. இந்த வகையில் 2020 இல் முதலாவது மாநாடு ‘வரலாற்றுப் போக்கில் தமிழியல் ஆய்வுகள்‘ என்னும் கருப்பொருளிலும், 2021 இல் இரண்டாவது மாநாடு ‘பன்முக நோக்கில் சங்க இலக்கியம்’ என்ற கருப்பொருளிலும், 2022 இல் மூன்றாவது மாநாடு ‘ஈழத்துத் தமிழியல் மரபும் மாற்றமும்’ என்ற கருப்பொருளிலும் நடாத்தப்பட்டன. இம் மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் நூலாகத் தொகுத்து வெளியிடப்பட்டன. அத்துடன் ஈழத்தறிஞர்களின் பங்களிப்புடனான நூல்களை மீள்திப்புச் செய்யும் பணியும் இக்காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வகையில் சோமசுந்தரப் புலவரின் சிறுவர்செந்தமிழ், வண்ணார்பண்னை வித்துவான். ந. சுப்பையபிள்ளையின் உரையுடனான தஞ்சைவாணன்கோவை, மட்டுவில். ம. க. வேற்பிள்ளையின் உரையுடன் கூடிய திருவாதவூரடிகள் புராணம் ஆகிய நூல்கள் இரண்டாவது மாநாட்டின்போதும், சுன்னாகம். அ. குமாரசுவாமிப்புலவரின் தமிழ்ப் புலவர் சரித்திரம், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகியவை மூன்றாவது மாநாட்டின்போதும் வெளியிடப்பட்டன.

மேலும் மரபுசார்ந்த தமிழறிஞர்களைக் கௌரவிக்கும் பணியும் இம் மாநாடுகளின்போது மேற்கொள்ளப்பட்டது. இந்த வகையில் இரண்டாவது மாநாட்டில் பண்டிதர்களான,
திரு. க. ஈஸ்வரநாதபிள்ளை
திரு. க. உமாமகேஸ்வரம்பிள்ளை
திருமதி. வைகுந்தம் கணேசபிள்ளை
தி. மு. சு. வேலாயுதபிள்ளை
திரு. ம. ந. கடம்பேஸ்வரன்
திரு. வீ. பரந்தாமன்
கலாநிதி. செ. திருநாவுக்கரசு ஆகியோரும்,

மூன்றாவது மாநாட்டில் பண்டிதைகளான,
திருமதி. புனிதவதியார் சிவக்கொழுந்து
திருமதி. மங்கையர்க்கரசி நடராசா
திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம்
செல்வி. யோகலட்சுமி சோமசுந்தரம் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் தமிழ்த்துறை மாணவர்களின் மேலதிக கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான மாணவர் மன்றம் எதுவும் இல்லாததால் அக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ்த்துறை மாணவர்களுக்காக தமிழியற்கழகம் என்ற மாணவர் மன்றம் உருவாக்கப்பட்டது. இதன் காப்பாளராக தமிழ்த்துறையின் தலைவர். பேராசிரியர். ம. இரகுநாதன் செயற்பட்டு வருகின்றார் இந்த அமைப்பினூடாக மாணவர்கள் ‘தமிழமுது’ என்ற பெயரிலான சஞ்சிகையொன்றினையும் வெளியிட்டுள்ளனர்.

மேலும் தமிழ்த்துறையில் முதுகலைமாணி, முதுதத்துவமாணி, கலாநிதி ஆகிய பட்ட மேற்படிப்புப் பட்டங்களையும் பல மாணவர்கள் பெற்றுள்ளனர்.

மேலும் ஓராண்டு கால அளவினைக்கொண்ட முதுமாணிப் பட்டத்திற்கான வகுப்புக்களையும் தமிழ்த்துறை உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினூடாக நடாத்தி வருகின்றது. தற்போது எட்டாவது அணி மாணவர்கள் இக்கற்கைநெறியில் இணைந்துள்ளனர்.

மேலும் தமிழ்த்துறை வெளிவாரிப்பட்ட அலகினூடாக வெளிவாரி மாணவர்களுக்கான வகுப்புக்களையும் நடாத்தி வருகின்றது. எதிர்வரும் காலங்களில் தமிழ்த்துறையின் செயற்பாடுகளை மேறும் விரிவுபடுத்தவேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.