ஆறாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு – 2025 ஆகஸ்ட் 15
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் எஸ்டேற் கந்தையா கார்த்திகேசன் அறக்கட்டளை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் ஆறாவது தமிழியல் ஆய்வு மாநாடு 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி கைலாசபதி கலையரங்கில் தமிழ்த்துறைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர். கி. விசாகரூபன் தலைமையில் சிறப்பாக ஆரம்பமாகின. ‘தமிழ்மொழி, இலக்கியச் செழுமையில் ஆழ்வார் பாசுரங்கள்’ என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இம் மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து இறைவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தினை திரு. ப. சிவமைந்தன் (போதனாசிரியர், இசைத்துறை, சேர் பொன் இராமநாதன் கட்புல மற்றும் ஆற்றுகைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இசைத்தார். அடுத்த நிகழ்வாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் கட்புல மற்றும் ஆற்றுகைகள் பீட நடனத்துறை மாணவிகள் வரவேற்பு நடனத்தை அளிக்கை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை திரு. ஈ. குமரன் (சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை) அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் (மேனாள் பேரவை உறுப்பினர், தலைவர், தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்) அவர்கள் ஆசியுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சிரேஷ்ட பேராசிரியரும் தலைவருமான பேராசிரியர். கி. விசாகரூபன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அடுத்து மாநாட்டின் இணைத் தலைவரும் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர். சி. ரகுராம் அவர்கள் வாழ்த்துரை நல்கினார். தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றது. அடுத்த நிகழ்வாக பேராசிரியர். கி. விசாகரூபன் அவர்களின் திறப்புரைஞர் அறிமுகத்தை நிகழ்த்தினார். தொடர்ந்து திறப்புரைஞருக்கான கௌரவம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேராசிரியர். அரங்க. இராமலிங்கம் (ஓய்வுநிலைப் பேராசிரியர், தமிழ்மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், இந்தியா) அவர்கள் ‘ஆழ்வார்களின் அருந்தமிழ்’ என்ற தொனிப்பொருளில் திறப்புரை ஆற்றினார். திறப்புரைஞரின் உரையைத் தொடர்ந்து மூத்த படைப்பாளுமைக்கான கௌரவிப்பு இடம்பெற்றது.
முதலாவதாக உயர் ஆளுமைக்கான கௌரவிப்பு நடைபெற்றது. இதில் கலாநிதி. எஸ். சிவலிங்கராஜா (மேனாள் தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), கலாநிதி. துரை. மனோகரன் (மேனாள் தலைவர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் ம. இரகுநாதன் (மேல்நாள் தலைவர், வாழ்நாட் பேராசிரியர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), திருவாளர் ச. விநாயகமூர்த்தி ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்கள். மூத்த படைப்பாளுமைக்கான கௌரவத்தினை மூத்த படைப்பாளர் க. சட்டநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
அடுத்து தமிழ்த்துறையினரால் வடக்குமாகாணப் பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட தமிழறிவுப்போட்டிப் பரீட்சையில் வெற்றியீட்டிய முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்துப்பீட மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட தமிழறிவுப் போட்டிப் பரீட்சையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் முறையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், கலைப்பீடாதிபதி, திறைப்புரைஞர் ஆகியோரால் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைத் தொகுதி வெளியீடு நடைபெற்றது. இவ் ஆய்வுக்கட்டுரைத் தொகுதியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா அவர்கள் வெளியிட்டுவைக்க, திறப்புரைஞராகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் அவர்கள் அதன் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
நிறைவாக ஆறாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டின் இணைப்பாளரும் தமிழ்த்துறை பேராசிரியருமான (செல்வி) செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் அவர்களின் நன்றியுரையுடன் ஆரம்ப நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
தொடர்ந்து பிற்பகல் 02.30 மணிமுதல் ஆய்வரங்க நிகழ்வுகள் நான்கு அமர்வுகளாக நடைபெற்றன. பேராசிரியர். சு. வித்தியானந்தன், பேராசிரியர் ஆ. சதாசிவம், பேராசிரியர் சி. தில்லைநாதன், பேராசிரியர் செ. யோகராசா ஆகியோர்களின் பெயர்களில் இந்த அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அமர்வுகளில் ஐம்பத்தைந்து கட்டுரைகள் ஆய்வாளர்களால் அளிக்கை செய்யப்பட்டன. நிகழ்வுகள் அனைத்தும் மாலை 06.30 மணிக்கு இனிதே நிறைவேறின.